Friday, August 12, 2016

இசைபட வாழ்தல்

கடந்த வாரத்தில் ஒருநாள் நண்பர்களுடனான  சாயுங்கால நடை முடித்து சத்திரத்து குளக்கரை மீது காற்று வாங்க அமர்ந்தேன்.. அவர்களில் ஒருவர் தன் அலைபேசியில் சேமித்து வைத்திருந்த பாடல்களை ஒலிக்கவிட்டார். முதல் பாடல்  “ஒரு கிளி உருகுது. உரிமையில் பழகுது.. ஒ மைனா மைனா” அதைத் தொடர்ந்து இரண்டாவது பாடலாக   “பெத்து எடுத்தவ தான் என்னையும் தத்து கொடுத்துபுட்டா”. எனும் பாடல் தொடங்கியது. அனைவரும் அமைதியாக பாடலை உள்வாங்கிக் கொண்டிருந்தோம். நண்பர்களில் ஒருவர் என்னிடம்  கேட்டார்.  “இது போன்ற  பாடல்களைக் கேட்கும் போது அந்த காலகட்டத்திற்கு அழைத்து சென்று விடுகிறதே! உனக்கும் அப்படி தோன்றுகிறதா?”  “நிச்சயமாக நானும் அப்படித்தான் உணர்கிறேன்” என்று பதில் அளித்தேன்.

          யோசித்துப் பார்க்கையில் என் பால்யம் முழுக்க திரையிசைப்பாடல்களின் வண்ணங்கள் நிரம்பியிருப்பதை உணரமுடிகிறது. இன்றும் எங்காவது அன்னக்கிளி, கன்னிப் பருவத்திலே, பதினாறு வயதினிலே, ‘உதயகீதம், இதயகோவில், பூவே பூச்சூடவா, ஊமை விழிகள், வைதேகி காத்திருந்தாள்,  சின்னபூவே மெல்ல பேசு, படிக்காதவன், முதல்மரியாதை, போன்ற படங்களின் பாடல்களை கேட்க நேர்ந்தால் அடுத்த நொடியே பால்யத்தில் ஓடித் திரிந்த பெரும் பாறைகளும் நீர்த் தேங்கி அல்லி பூத்து நிற்கும் சுனைகளுமாக மனதில் முகிழத் தொடங்கி விடுகின்றன. முட்டிச்செடி பூ பூத்து மனதை வெண்மை யாக்குகின்றது. ஞாபக அடுக்கில் சேகரமாகியிருக்கும்  கொஞ்சிப் பழத்தின் வாசனை காற்றில் பரவுகிறது. பிள்ளை பிராயத்தில் ஓடித்திரிந்த வளமோட்டு பாறையும் பாம்படிச்சான் பாறையும் பாடல் வரிகளினூடாக வளர்ந்து மனதை அடைத்துக் கொள்கின்றன. ஆண்டா செட்டி குளத்து இலுப்பைப் பூவின் மனம் மெல்லத் தவழ்ந்து வந்து நாசியில் மோதுகின்றது. இவ்வளவு நினைவுகளை ஆண்டுகள் பல கடந்தும் ஒற்றைப் பாடல் எங்கு அடைகாத்து வைத்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை

          என் அத்தை கிட்டதட்ட இருபது வருடங்களின் எல்லா இரவுகளிலும் யேசுதாசும் இளையராஜவும் பாடிய அம்மா பாடல்களை கேட்டுவிட்டுதான் தூங்கச் செல்வார். வேலை தேடி பிரிந்து சென்ற தன் மகனின் நினைவுகள் ஏற்படுத்திய வலிகளுக்கு அந்தக் காந்தக் குரல்கள் மருந்திடுவதாக அவள் உணர்ந்திருக்கக்கூடும். இதுபோலவே அனைத்து உறவுகளும் தனிமைப்படுத்திய பிறகு கண்ணதாசனின் தத்துவப் பாடல்களையும் சீர்காழியின் குரலையும் கேட்டு தன் அந்திமத்தை கடந்த என் தாத்தாவின் செயலை எப்படி புரிந்து கொள்வது? சூழலின் அழுத்தத்தால் கெட்டித்தட்டிபோன தன் வெறுமையை கண்ணதாசனின் வரிகள்  இட்டு நிரப்புவதாக அவர் கடைசிக் காலம்வரை நம்பிக் கொண்டிருந்தார்.

           “அவளா சொன்னாள் இருக்காது, அப்படி எதுவும் நடக்காது” எனும் வரிகளுக்கு . என்னுடைய மேல்நிலை வகுப்பு  ஆங்கில ஆசிரியர் தன்னை ஒப்புக்கொடுத்து  சிந்திய கண்ணீர் துளிகள் எங்களிடம் எதை யாசித்திருக்கக்கூடும்?. அவருக்குள் தேங்கி சிக்குண்டிருந்த  எந்த நினைவு அவரை அழத்தூண்டியிருக்கும். மாணவர்களின் முன்பாக அழக்கூடாது எனும் புத்தியை பின்னுக்குத் தள்ளி தன் நிலை மறக்கச் செய்ய ஒரு பாடல் வரிக்குத் திராணி இருக்கிறதா? வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு பாடல் ஒரு குறிப்பிட்ட ஞாபக அடுக்கை மட்டும்  ஏன் குலைத்துப்போட வேண்டும். மனித உணர்வுளை அசைத்துப் பார்க்கக்கூடிய  தொடுகை பாடலின் எந்த கூறில் இருக்கிறது  என்று யவராவது சுட்டிக்காட்டிவிட முடியுமா? வாழ்க்கையை ஒட்டி  திரை இசை பாடல்களை புரிந்துகொள்ள முயல்கையில் இதுபோன்ற கேள்விகளே மனதில் வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு வசதி கருதி  காலம் தான் அவற்றுக்கு  அந்த சக்தியை வழங்கியிருக்கிறது எனும் முடிவிற்கு வந்துவிடுகிறோம்.

          மதுரை சோமுவும் அருணா சாய்ராமும் பாடிய  “என்ன கவிபாடினாலும்” எனும் பாடலை அடிக்கடி கேட்பது என் வழக்கம். இருவர் குரல் வழியாகவும் அப்பாடலை கேட்பது ஒரு சுகானுபவம்.  கர்நாடக சங்கீதம் குறித்த முறையான அறிவு இல்லை என்றாலும்கூட நண்பர்களுடைய சிபாரிசின் பேரில் நல்ல சங்கீதங்களை அவ்வப்போது கேட்பதுண்டு.  ஒருமுறை அப்படிக் கேட்டுக்கொண்டிருந்த போது கவிஞர்.கண்டராதித்தன் உள்ளிட்ட என் நண்பர்களும்  உடன் இருந்தனர். நாங்கள் இருவரும் மதுரை சோமுவின் குரலில் லயித்திருந்தோம். பாடல் முடிந்ததும் திரும்பவும் ஒலிக்கவிட்டேன். உடன் இருந்த இன்னொரு நண்பன் இடைமறித்து,  “அப்படி என்னடா இந்தப் பாட்ல இருக்கு?” என்று கேட்டான். நாங்கள் இருவரும் அவனுக்கு அந்தப்பாடலின் சிறப்புகளை விளக்கினோம். எப்படி விளக்கியும் அவன் புரிந்து கொள்வதாக இல்லை. இது நடந்தது இரண்டாயிரத்தில்.

           கடந்த மாதம் ஒரு இரவு அவனுடன் ஒரே விடுதியில் தங்க நேரிட்டது. விடியற்காலை இருக்கும். அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.  அவன் அலைபேசி ஒலித்தது. அருணா சாய்ராம் தன்னுடைய துல்லியமான குரலில் “என்ன கவி பாடினாலும்” என்று பாடிக்கொண்டிருந்தார். நான் ஆச்சரியத்தோடு  அவனைத் தட்டி எழுப்பினேன். விழிகளைத் திறந்து மலங்க மலங்கப் பார்த்தான். இந்த பாடலை எப்ப இருந்துடா ரிங்டோனா வச்சிருக்க? என்று கேட்டேன்.  “ஐந்து வருஷமா இந்த பாட்டு தாண்டா இருக்கு ” என்று சொல்லி  கண்களை சிமிட்டி சிரித்தான். அப்பாடலை தேர்வு செய்ய எது அவணைத் தூண்டியிருக்கும்?.
   
கூர்மையான செவிகளும் ரசனையான மனதும் போதாதா நல்ல பாடல்களை கடப்பதற்கு?

No comments:

Post a Comment